நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும், தவறான உடல் நிலைப்பாட்டில் நீண்ட நேரம் இருந்ததுமே தனது கழுத்து பாதிப்புக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்துப்பட்டை அணிந்து வரும் ஷகீலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சிகளுடன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது உடல்நிலை மற்றும் சிகிச்சை அனுபவம் குறித்து விரிவாக பகிர்ந்துள்ளார்.
கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்தபடி தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை செல்போனில் கேம் விளையாடியதாகவும், பின்னர் பல மணி நேரம் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்ததாகவும் ஷகீலா தெரிவித்துள்ளார். இதனால் கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டதாகவும், இதையடுத்து சுமார் ரூ.3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அடிப்படை செயல்களுக்குக்கூட பிறரின் உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ள ஷகீலா, செல்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“போன் மிகவும் பயனுள்ள ஒரு பொருள். ஆனால் அதை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்ட அவர், குழந்தைகளிடமும் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

