தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘டேர் டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ‘டேர் டெவில்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் உள்ளிட்டவை சேர்த்து சுமார் ரூ.180 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு படத்தின் முதல்கட்ட வியாபாரம் முடிந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. அஜித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் களமிறங்குவது மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி ஆகியவை இந்தப் படத்தின் வணிக மதிப்பு அதிகரிக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

