Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘சுட்டா சூரியனை’ தான் ஆல் டைம் ஃபேவரிட்! – ஜேசன் சஞ்சய் பேட்டியால் ட்ரெண்டாகும் யுவன் பாடல்!

Jason Sanjay's Interview Makes Yuvan's Hit Song Trend Again

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து அதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜேசன் சஞ்சய் அளித்த பிரத்யேக பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்துவிட்டு ஹாலிவுட்டில் படம் இயக்க அழைத்தால், இந்தியாவில் இருந்து எந்த நடிகரை அழைத்துச் செல்வீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உடனடியாக பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா (விஜய்) தான். அவரும் ஜேசன் ஸ்டேதமும் இணைந்தால் அது ஒரு அற்புதமான கூட்டணியாக இருக்கும். நான் சொன்ன இந்த பதிலை ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.

தொடர்ந்து, தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் குறித்து பேசிய அவர், யுவன் சங்கர் ராஜா தான் தனது ஆல் டைம் ஃபேவரிட் இசையமைப்பாளர் என்றும், தனது ‘சிக்மா’ படத்திலும் யுவன் ஒரு பாடலைப் பாடியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஆர்யா நடித்த ‘சர்வம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுட்டா சூரியனை’ பாடல் தான் யுவன் இசையில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் பகிர்ந்துகொண்டார்.

அதே நேரத்தில், சிறுவயதில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்து பார்த்த மறக்க முடியாத நினைவையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ஜேசன் சஞ்சயின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, அவர் குறிப்பிட்ட ‘சுட்டா சூரியனை’ பாடல் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பாடலை மையமாகக் கொண்டு ரசிகர்கள் ஏராளமான வீடியோ எடிட்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால், பல ஆண்டுகளுக்கு பிறகும் யுவன் சங்கர் ராஜாவின் அந்த ஹிட் பாடல் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.