முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’, குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்த திரைக்கதையின் மூலம் சொல்ல முயற்சிக்கிறது.
குழந்தை பிறந்த பிறகும் குஸ்தி போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற தனது லட்சியத்தை விடாமல் போராடும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, அவரது கணவர் விஷ்ணு விஷால் முழு ஆதரவாக நிற்கிறார். மனைவியின் கனவை நனவாக்குவதற்காக வீட்டையும் குழந்தையையும் கவனித்துக்கொண்டு, தேசிய அளவிலான போட்டிக்காக அவரை தயார் செய்கிறார்.
ஆனால், மகளின் எதிர்காலம் குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மகளையும் குஸ்தி வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா லட்சுமி விரும்ப, குழந்தையின் விருப்பமே முக்கியம் என விஷ்ணு விஷால் வலியுறுத்துகிறார். இந்த கருத்து மோதல், அவர்களது குடும்ப வாழ்க்கையை விவாகரத்து வரை இட்டுச் செல்கிறது. இறுதியில் அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? குடும்பத்தையும் கனவையும் ஒன்றாக காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷ்ணு விஷால், குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணிக்கும் கணவராக மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மனைவியின் கனவுக்கு துணையாக நிற்கும் கணவர், மகளின் மீது அன்பு செலுத்தும் தந்தை, தேவைப்படும் இடங்களில் ஆக்ஷன் ஹீரோ என பல பரிமாணங்களில் தனது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்தை விட இந்த முறை இன்னும் வலுவான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். குஸ்தி களத்தில் தன்னம்பிக்கையுடன் மோதும் வீராங்கனையாகவும், குடும்பத்தில் உணர்ச்சிவசப்படும் மனைவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் குஸ்தி காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் தெளிவாக வெளிப்படுகிறது.
தம்பதியின் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாரா, தனது இயல்பான நடிப்பால் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். கருணாஸ் தனது டைமிங் காமெடியால் சிரிப்பை வரவழைக்கிறார். மோக்ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக பங்களித்துள்ளனர். சிறப்பு தோற்றங்களில் வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் வருகையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இயக்குநர் செல்லா அய்யாவு, முதல் பாகத்தின் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை தொடர்ந்தே, கணவன்-மனைவி புரிதல், குழந்தை வளர்ப்பு, பெண்களின் கனவு போன்ற சமகால கருத்துகளை எளிமையாகவும் பொழுதுபோக்காகவும் சொல்லியிருக்கிறார். சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இயல்பான கதாபாத்திரங்கள் அதை மறக்கச் செய்கின்றன.
ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், குஸ்தி போட்டிகளையும் குடும்ப தருணங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஷான் ரோல்டனின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பின்னணி இசையும் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு சிறப்பான பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ குடும்ப உறவுகள், பெண்களின் கனவு மற்றும் பெற்றோர் பொறுப்பை நகைச்சுவையுடன் சொல்லும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது.

