நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அனந்திகா, நடிகர் விஜய்யை சந்தித்த அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “அம்மா ‘வாரிசு’ படத்தில் நடித்தபோது, விஜய்யை பார்க்க நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அம்மா, ‘முன்னாடி விஜய்யை பார்த்ததும் நீ அழுதுட்ட. இப்போ ஷூட்டிங் ஸ்பாட். அதே மாதிரி செய்து மானத்தை வாங்கிடாதே’ என்று எச்சரித்தார். நானும் தைரியமாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். ஆனால் விஜய்யை பார்த்த அடுத்த நொடியே அழுதுவிட்டேன்” என்றார்.
மேலும், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும் அழுது விடும் பழக்கம் உள்ளது. அதனால்தான் சமீபத்தில் அக்காவின் திருமண அழைப்பிதழை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கச் செல்லும் முன், அம்மாவும் அப்பாவும் ‘அழக்கூடாது என்று சத்தியம் செய்’ என்று என்னிடம் கேட்டார்கள்.
இந்த முறை நான் அழவில்லை. எங்களுடைய சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால் அந்த 15 நிமிடங்களும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். அப்போது என் அக்கா, ‘கொஞ்சம் நிறுத்துறியா? அவர் பயந்துடப் போறாரு!’ என்று கிண்டலாக சொன்னார். உடனே நான் முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
விஜய் மிகவும் இனிமையானவர்” என்று அனந்திகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

