பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் தங்களது மகன் ராகா ரங்கராஜின் மொட்டை அடிக்கும் விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே திருமணமான நிலையில் தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன், இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, குழந்தையின் உயிரியல் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை கடந்த ஏப்ரல் மாதம் ஜாய் கிரிசில்டாவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தார். குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயரிடப்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தேவையான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த ஆறு மாதங்களாக தனது மகனுக்கான அனைத்து கடமைகளையும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்து வருவதாக ரங்கராஜ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மகனின் எதிர்கால தேவைகளுக்காக தொடர்ந்து ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரங்களுக்கு மத்தியில், தற்போது ராகா ரங்கராஜின் மொட்டை அடிக்கும் கோயில் விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே நிகழ்வில் இணைந்து காணப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

