Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

Dhanush Personally Invites and Appreciates the Modha Raathiri Team

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பானுப்பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விருப்பமே இல்லாத இருவர் திருமண பந்தத்தில் இணையும் நிலையில், அவர்களது திருமண நாளன்று இரவு நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘மொத ராத்திரி’ படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜா கருப்பசாமியை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுப் பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “‘மொத ராத்திரி’ மனதிற்கு இதமான ஒரு திரைப்படம். முதன்முறையாகப் பணியாற்றிய ஒரு குழுவினரின் இந்த அற்புதமான முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். தயவுசெய்து உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.