Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

Even the Assembly Has Its Own ‘Gatta Kusthi – Minister Rajmohan

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதையடுத்து, ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன், “சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது. ஆனால் அது ஆரோக்கியமான சண்டை. மக்களுக்கு யார் நல்லது செய்வது என்பதற்கான ஆரோக்கியமான போட்டிதான். கூட்டம் முடிந்ததும் கைகுலுக்கிவிட்டு, மீண்டும் மக்கள் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவோம்” என நகைச்சுவையாக பேசினார்.

மேலும் பேசிய அவர், “சினிமாவுக்கு இப்போது ஒரு போட்டி வந்துள்ளது. ‘எப்போ மாண்புமிகு பேரவைத் தலைவரே’ என முதலமைச்சர் விஜய் கூறுவார் என்று மக்கள் டிவியை பார்க்கத் தொடங்கிவிட்டனர்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர் பிரபுதேவா மாஸ்டர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று கொண்டாடப்படும் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உண்மையான சினிமா காதலர். சினிமா மற்றும் கல்வித் துறைகளில் தொடர்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து ஓடுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சாதனை. ஐந்து நாட்கள் கூட ஒரு படத்தை வெற்றிகரமாக ஓட வைப்பது சவாலாக இருக்கும் நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய மணிமகுடம்” என்றார்.

மேலும், “இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும், கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.