‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், சிறப்பான திட்டமிடல் மற்றும் தொடர் உழைப்பின் மூலம் 40 நாட்களிலேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, கிராமத்து பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. தந்தை – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையப்படுத்திய அழுத்தமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது.
மதுரை மேலூர் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க கோயிலில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டமாக மதுரை நகரப் பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


