தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதனை எவ்வாறு உருவாக்குவார் என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் விஜய்யின் பயோபிக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, விஜய்யின் பயோபிக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என தலைப்பு வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அப்படத்தின் திரைக்கதையை இரண்டு பாகங்களாக அமைக்க விரும்புவதாக கூறிய அவர், முதல் பாதியை விஜய்யின் திரைப்பயணம் மற்றும் சினிமாவில் அவர் அடைந்த சாதனைகளை மையமாக வைத்து உருவாக்குவேன் என தெரிவித்துள்ளார்.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், அரசியலில் முழுநேரமாக களமிறங்க எடுத்த முடிவை படத்தின் முக்கியமான இடைவேளைக் காட்சியாக அமைப்பேன் என்றும், இரண்டாம் பாதி முழுவதையும் அவரது அரசியல் பயணம் மற்றும் மக்கள் சேவையை மையமாக வைத்து உருவாக்குவேன் என்றும் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
விஜய்யின் பயோபிக் தொடர்பாக தற்போது எந்தவொரு அதிகாரப்பூர்வ திட்டமும் உருவாகவில்லை என்றாலும், அவரது வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் எண்ணமே தனக்கு உற்சாகம் அளிப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 69வது திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியானதைத் தொடர்ந்து, விஜய் முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
மறுபுறம், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஸ்வத் மாரிமுத்து பிஸியாக உள்ளார். மேலும், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவர் அறிமுகமாகவுள்ளார்.

