நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த காலகட்டத்தில் உடலின் தேவைகளுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
உடற்பயிற்சி மற்றும் உடல்தகுதியில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் சமந்தா, கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிக்கான இலக்குகள் முற்றிலும் மாறுபடும் என தெரிவித்துள்ளார்.
“உடலுக்குள் ஒரு சிறிய உயிரை வளர்க்கும்போது, நமது உடற்பயிற்சியின் நோக்கங்களும் மாறுகின்றன. இந்த உடல் நிகழ்த்தும் அதிசயங்களில் இதுவே மிகவும் வலிமையானது. உடல் கேட்கும் ஓய்வையும் தேவையான மாற்றங்களையும் வழங்குவது அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா பகிர்ந்துள்ள வீடியோவில் செஸ்ட் பிரஸ், கெட்டில்பெல் மற்றும் டெட்லிஃப்ட் உள்ளிட்ட வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கர்ப்பகாலத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் பயிற்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பயிற்சிகளைப் பார்த்து யாரும் அப்படியே பின்பற்ற வேண்டாம் என ரசிகர்களுக்கு சமந்தா அறிவுறுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து வருவதுடன், மருத்துவரின் அனுமதி மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற கர்ப்பகால உடற்பயிற்சி பயிற்சியாளரின் மேற்பார்வையிலேயே தான் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகாலமும் தனித்துவமானது. எனவே, உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்” எனவும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அண்மையில் தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தான் நடித்து தயாரித்த ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், விரைவில் மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், அதன்பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
View this post on Instagram

