தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிப்பதுடன், ஒரு காவல் அதிகாரியையும் கொடூரமாக கொலை செய்கிறார். இதையடுத்து ஓட்டலில் பதுங்கியிருக்கும் அவரை போலீசார் கைது செய்கின்றனர். அவருடன் நெருக்கமாக பழகிய பாடகி சஞ்சனாவும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்கும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத விதமாக வாமிகா கபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து வரும் வாமிகா, ஒரு கட்டத்தில் லோகேஷுடன் பயணிக்கத் தொடங்குகிறார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் லோகேஷும், அவருடன் இணைந்து போராடும் வாமிகாவும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு
இதுவரை இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் கனகராஜ், நடிகராகவும் தனது புதிய பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அதிரடியான காட்சிகளில் மட்டுமின்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
வாமிகா கபி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டுள்ளார். சேலை கட்டியபடி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் அவரது ஆக்ஷன் மிரட்டலாக உள்ளது. எப்போதும் கையில் பாதுகாப்பு கவசத்துடன் லோகேஷுக்கு துணையாக நிற்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
ஓரிரு காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் சஞ்சனா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. அதேவேளை, அவரது கதாபாத்திரத்தில் உதட்டில் சிகரெட் பற்றவைக்கும் காட்சிகள் தேவையற்றதாகத் தெரிகின்றன.
கிரிஷ் தயால், தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்பம்
முகேஷின் ஒளிப்பதிவு படத்தின் பரபரப்பான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. அனிருத்தின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் வேகத்தையும் தாக்கத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக ‘மவுன ராகங்கள்…’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக உள்ளன. அதே நேரத்தில், படம் முழுவதும் இடம்பெறும் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் சற்று அதிகமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. அதுபோல, கெட்ட வார்த்தைகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் உறுத்துகிறது.
மொத்தத்தில்…
ஒரு கேங்ஸ்டர் கதைக்குள் காதல், எமோஷன், பாசம், வன்மம் என பல்வேறு அம்சங்களை சரிவிகிதத்தில் கலந்து, பரபரப்பான திரைக்கதையுடன் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
மொத்தத்தில், அதிரடி மற்றும் உணர்வுகளின் கலவையாக ‘டி.சி’ ரசிகர்களை ஈர்க்கும் கேங்ஸ்டர் படமாக அமைந்துள்ளது.

