பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், அதிநவீன தரவு சேகரிப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு தொழில்நுட்ப மையத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அந்த வீடியோக்களில், தாடி மற்றும் மீசையின்றி, வழக்கத்தை விட மிகவும் ஒல்லியான தோற்றத்தில் சல்மான் கான் காணப்பட்டார். அவரது இந்த மாற்றமான தோற்றம் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் சிலர், “சல்மான் கானுக்கு என்ன ஆனது?”, “உடல்நலப் பிரச்சினையா?” என கவலை தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர், “60 வயதான ஒருவர் இயல்பாகவே தனது வயதுக்கேற்ற தோற்றத்தில் இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட வேண்டியது எதுவும் இல்லை” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சல்மான் கான் தற்போது ‘மாத்ருபூமி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், ஆரம்பத்தில் ‘Battle of Galwan’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது. அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் சித்ராங்கதா சிங், முகேஷ் ரிஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

