‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து நீண்ட நாட்களாக எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சியான் 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் சுமார் 50 முதல் 60 நாட்கள் வரை கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இப்படத்தின் மூலம் ரியா ஷிபு தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆனால், அவர் கதாநாயகி அல்ல என கூறப்படுகிறது. இவர்களுடன் ஊர்வசி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வித்தியாசமான மற்றும் தனித்துவமான பாணியில் இந்தப் படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

