Tamilstar
News Tamil News

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

dubbing artist union

சென்னை ஐகோர்ட்டில், மயிலை எஸ்.குமார், டி.சிஹி மோல், வி.காளிதாஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படம், டி.வி. தொடர் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம். இந்த சங்கத்தின் தலைவராக ராதாரவி, பொருளாளராக ராஜகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

இந்த சங்கத்தில் ஏராளமான நிதிமுறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து சங்கத்தின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும், நிர்வாகிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருவது இல்லை. வரவுசெலவு கணக்கு புத்தகத்தை உறுப்பினர்கள் பார்வையிட சட்டப்படி எந்த தடையும் இல்லை. என்றாலும், அவற்றை பார்வையிட அனுமதிப்பது இல்லை. இதுவரை உறுப்பினர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ, திருமண உதவிகள் செய்தது குறித்த விவரம் கேட்டாலும் தருவது இல்லை.

ஆண்டு சந்தாவாக உறுப்பினர்களிடம் ரூ.180 மற்றும் ரூ.200 வசூலித்தாலும், வெறும் ரூ.120 மட்டுமே வரவு வைக்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 500 நன்கொடையாக சங்கம் வசூலித்துள்ளது என்று ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்களில் ரூ.4 லட்சத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல ஏராளமான நிதிமுறை கேடுகள் நடந்துள்ளன.

இதுகுறித்து கடந்த ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் தொழில் சங்கங்களின் கூடுதல் பதிவாளருக்கு புகார் மனு அனுப்பினோம். இதுபோன்ற சூழ்நிலையில், கணக்குகளை சரி பார்த்து தகுந்த நடவடிக்கை எடுப்பது கூடுதல் பதிவாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். ஆனால், கூடுதல் பதிவாளர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் கூடுதல் அரசு பிளீடர் ஜெ.ரமேஷ், மனு தாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் இந்த ஐகோர்ட்டில் தீர்வு காண முடியாது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு சமர்பித்து அதனடிப்படையில் தான் தீர்வு காண முடியும். மனுதாரர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் கடந்த ஜூன் 11-ந்தேதி, நவம்பர் 18-ந்தேதி கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில், இருதரப்பினர்களும் தரும் ஆதாரங்கள், ஆவணங்களை பரிசீலித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.