‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி
பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த ‘இட்லி கடை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘ரெட்ட தல’.
கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். வருகிற 25-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், முத்தையா, கோகுல், கிஷோர் முத்துராமன், பாலாஜி வேணுகோபால் என பலர் கலந்து கொண்டனர்.
இப்படம் பற்றி அருண் விஜய் தெரிவிக்கையில், ‘இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி. படம் படு வேகமாக இருந்தது, அதைச் சரியாகக் கட் செய்து கொடுத்துள்ளார்.
நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்’ என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.


