விஜயகாந்துடன் நடிச்ச நினைவுகளை பகிர்ந்த நடிக்க சரத்குமார்
விஜயகாந்த் மகன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இப்படம் தொடர்பாகவும் கடந்த கால நிகழ்வுகள் குறித்தும் சரத்குமார் தெரிவிக்கையில்,
‘இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், என் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, ‘புலன் விசாரணை’ படத்துக்காக ஒரு வில்லனைத் தேடிக்கொண்டிருந்தபோது, சரத்குமார் வாட்டசாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்திடம் பரிந்துரை செய்திருக்கிறார்.
உடனடியாக என்னை அழைத்து அவர் முன் நிறுத்தினார்கள். என்னைப் பார்த்ததும் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் எனச் சொன்னார். என்னைப் பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்துக்குச் சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன்நின்றேன்.
அன்று தொடங்கியது தான் இந்தக் கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம். அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு, எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். ‘சரத் இந்தப் படத்தில் உங்களுக்குத்தான் மிகப்பெரிய பெயர் கிடைக்கும்’ என்றார். அதைத் தொடர்ந்து ‘கேப்டன் பிரபாகரன்’ படத்திலும் நடித்தேன்.
இந்த 2 படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டைக் காட்சிகளில் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியைச் சொன்ன போதும், சரத்குமார் குணமடைந்து வந்த பின் அந்த காட்சியைப் படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று வரை அவருடன் என்னைப் பிணைத்து வைத்திருப்பதும் அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அருகே இருந்து அனுபவித்தவன் நான்.
அவர் மகன் சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப் பெரிய நட்சத்திர நடிகராவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக, எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்’ என சரத்குமார் கூறினார்.


