Tamilstar
Movie Reviews

மொத ராத்திரி – திரை விமர்சனம்

Modha Rathri movie review

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத் தயாராக இருக்கிறார். எதிர்பாராத சூழலில் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால், முதல் இரவில் அனீஸ்மா கூறும் ஒரு உண்மை அவர்களது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘மொத ராத்திரி’ படத்தின் மையக்கதை.

ரிஷிகாந்த் தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டுள்ளார். அவரது முகபாவனைகளும் உடல்மொழியும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளன. குறிப்பாக, சேத்தனுடன் மழையில் இடம்பெறும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

கதாநாயகி அனீஸ்மா அனில்குமார், காதல், குழப்பம், மன அழுத்தம் என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். கோவில் பூசாரியாக வரும் சேத்தனின் நடிப்பும், அப்துல், லீ, பக்ஸ் ஆகியோரின் கூட்டணியும் படத்தின் நகைச்சுவை அம்சங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

இயக்குநர் ராஜா கருப்புசாமி, பெரிய திருப்பங்களை மட்டுமே நம்பாமல் மனிதர்களின் உறவுகள் மற்றும் இயல்பான உரையாடல்களை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியுள்ளார். கிராமத்து பின்னணியில் காதல், திருமணம், குடும்ப உறவுகள் மற்றும் சாதி சார்ந்த கருத்துகளை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

பரத் சங்கரின் பின்னணி இசையும், சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவும் படத்தின் உணர்வுகளுக்கு சிறப்பாக துணை நிற்கின்றன.

மொத்தத்தில், காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் என அனைத்தையும் எளிமையான முறையில் கலந்து சொல்லப்பட்டுள்ள ‘மொத ராத்திரி’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது.