நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர் மன்றங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரசிகர்கள் ஒன்றாக கூடுவது திரைப்படங்கள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் கட்-அவுட் கொண்டாட்டங்களுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்றும், அந்த ஒற்றுமையை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் தனுஷ் அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து, தனுஷ் அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ் குமாரிடம், “தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “தனுஷ் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். ஒரு நண்பராக அவர் எந்த முடிவு எடுத்தாலும், அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் கண்டிப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக வலுப்படுத்தி வருவதுடன், சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருவது அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எனினும், தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை அரசியல் கட்சி தொடங்குவது அல்லது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

