கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக் குலுங்குவதை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சுப்பிரமணியபுரம்’ படப்பிடிப்பின்போது, சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்குச் சென்ற சசிகுமார், அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்குச் சென்ற அவர், தான் நட்டு வைத்த மரங்கள் நன்கு வளர்ந்து அதிக அளவில் பூக்கள் பூத்திருப்பதை கண்டு பூரிப்படைந்தார். மரங்களின் அருகில் குடும்பத்தினருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவிஞ்சின் நினைவுத் தூணையும் பார்வையிட்ட சசிகுமார், அதில் இடம்பெற்றிருந்த தகவல்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நாம் இந்த உலகில் வாழும் காலத்தில் சில நினைவுகளை விட்டுச் செல்வோம். நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் கூட ஒருநாள் நம்மை மறந்துவிடலாம். ஆனால், நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் உலகிற்கு நன்மை தரும். எனவே, வாழும் காலத்திலேயே மரங்களை வளர்த்து, இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்வோம்” என்றார்.

