எஸ்.வி.சேகர் விஜய் மீது மறைமுக அட்டாக்!
ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் முன்னாள் மேலாளராக இருந்த இவர் அண்மையில் திமுகவில் இணைந்துகொண்டார். இவர், திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தார்.
மேலும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், எஸ்.வி.சேகர், தேவயானி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய எஸ்.வி.சேகர்,
‘விஜய்யை வைத்து படம் எடுத்தும் இன்றைக்கும் பி.டி.செல்வம் நன்றாக இருக்கிறார் என்றால், அதுவே மிகப்பெரிய விஷயம். அவர் எடுத்த புலி அவரைக் கடிக்காமல் தப்பித்ததே பெரிய விஷயம். புலி வாலை பிடித்தால், தப்பிக்க முடியாது என்பார்கள். இவர் புலி வாலை பிடித்தாரோ, இல்லை காலை பிடித்தாரோ தெரியவில்லை நைசாக வெளியில் வந்துவிட்டார்.
நான் மயிலாப்பூரில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ரூ 300 கோடி ரூபாய்க்கு வேலை நடந்தது. ஒரு பைசா கூட கமிஷன் வாங்காத நேர்மையான எம்.எல்.ஏ.வாக நான் இருந்தேன். அந்த மனதிருப்தியே எனக்கு போதும். அதை விட்டு விட்டு நானே இருக்க வேண்டும், எனக்கு பின் என் மகன் இருக்க வேண்டும் என சொல்வது சரியாக வராது. ஆனால், பையன் உழைத்து வந்தால், கண்டிப்பாக அவர் வரலாம் அப்பாவிற்கு இருக்கும் குணம் தானே பையனுக்கும் இருக்கும்.
பி.டி.செல்வம் நினைத்து இருந்தால் நான் விஜய்யிடம் பிஆர்ஓவாக இருந்தேன், விஜய்யை வைத்து படம் எடுத்தேன் என சொல்லி இருக்கலாம். ஆனால், அதை அவர் ஒரு இடத்திலும் சொன்னதே இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு அரசியல் தெரியும். விஜய் இன்று ரூ.500 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார். அவரிடம் பி.ஏ.வாக இருந்த பி.டி செல்வம் சும்மாவா இருந்து இருப்பார். அவர் 200 கோடியாவது சம்பாதித்து இருப்பார் என பலர் நினைப்பார்கள். ஆனால், விஜய்யிடம் இவர் இருந்த வரைக்கும், இவர் வாங்கிய மாத சம்பளம் 10,000 ரூபாய் தான், இதுதான் உண்மை.
நம்ம வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கே 11 ஆயிரம் ரூபாயை சம்பளமாக கொடுக்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்து சாதித்து இருக்கும் பி.டி. செல்வத்திற்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த காலத்தில் பாராட்டுவிழா நடத்துவது எல்லாம் ரொம்ப ஈசி, பிரியாணி கொடுத்தால் போதும், ஆனால் இன்று இந்த அரங்கம் முழுக்க ஆட்கள் நிரம்பி இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர் மீது இருக்கும் அன்பு தான். இன்னும் கொஞ்ச நாளில் காமராஜர் அரங்கில் இவருக்கு பெரிய விழா ஒன்று நடத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.


