டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?
பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வெளியான ‘மதராஸி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இச்சூழலில் சல்மான்கான் தொடர்பான வழக்கு பற்றிக் காண்போம்..
ஆளுமை உரிமை வழக்கில் சல்மான் கானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சல்மான் கான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆளுமை உரிமை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
விசாரித்த நீதிமன்றம், சல்மான்கானின் அடையாளம், குரல் போன்றவற்றை எந்த நபரோ, வலைதளமோ, செயலியோ அல்லது மின் வணிக தளமோ பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்று குரல் மாதிரிகளை உருவாக்குவதை முதன்மை வணிகமாகச் செய்து வருகிறது. இந்நிறுவனம் சல்மான் கானின் ஆளுமை உரிமை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி, சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி.27-ந் தேதிக்குத் தள்ளிவைத்தது.


