மூன்று வில்லன்களையும் ஒரே புள்ளியில் இணைத்து வித்தை செய்யும் சதீஷ்.
திருட்டு தொழில் செய்து வந்த ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ஆகியோர் தனித்தனியாக பிரித்து தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் ஆனந்தராஜ், தங்கம் கடத்துவதற்கு நாயகன் சதீஷ் உதவி செய்கிறார். ஆனால் அது முடியாமல் போகிறது. இந்நிலையில் விமான நிலையத்தில் ரூபாய் 25 கோடி மதிப்புள்ள வைரத்தை மதுசூதனன் கடத்துவதை சதீஷ் தெரிந்துக் கொள்கிறார். இதை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து வைரத்தை அபேஸ் பண்ண திட்டம் போடுகிறார் சதீஷ்.இறுதியில் வைரத்தை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து சதீஷ் கொள்ளை அடித்தாரா? கொள்ளை சம்பவத்தில் சதீஷ் ஈடுபட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், யதார்த்தமாக நடித்து இருக்கிறார். காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார். நாயகி சிம்ரன் குப்தா, பத்திரிகை நிருபராக நடித்து ரசிகர்களை கவர முயற்சி செய்து இருக்கிறார்.பல படங்களில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ், சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்தப் படத்தில் டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லனாக நடித்து இருக்கிறார். சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்து இருக்கிறார். இவருடன் வரும் டான்சர் ஜப்பான் குமார் காமெடியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.மதுசூதனன், சுப்ரமணிய சிவா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. ஆனால், பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. சதீஷ் மேஜிக் நிபுணர் என்று சொல்லுகிறார்கள். ஆனால், அந்த மேஜிக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது வருத்தம். முதல் பாதியை காமெடியாக கொடுக்க நினைத்து தடுமாறி இருக்கிறார். இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் விமான நிலையத்திலே நகர்கிறது. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்த வில்லை.
இசையமைப்பாளர் விபிஆர் இசையில் சுனாமிகா பாடல் கேட்பதற்கு இதம். பின்னணி இசை ஓகே. கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.படத்தொகுப்புஅருள் இ.சித்தார்த் படத்தொகுப்பு சிறப்பு. “,
