சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி, தனது கனவு படமான மகாபாரதத்திற்கு பிறகு திரைப்பட இயக்கத்திலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘பாகுபலி’ மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘RRR’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளை இயக்கிய ராஜமௌலி, தற்போது நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். காசியின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலியின் நீண்ட கால கனவான மகாபாரதத்தை திரைப்படமாக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இது குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மகாபாரதம் திரைப்படத் தொடருக்குப் பிறகு ராஜமௌலி சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இது குறித்து ராஜமௌலி தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும், இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் பலரும் இது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய சினிமாவுக்கு மேலும் பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்க காத்திருக்கும் ராஜமௌலி, இத்தகைய முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவரது அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.