திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 29-ந்தேதி 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 9-ந்தேதி வரை காட்சி அளிக்கும்.
மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று பார்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையில் முக்கிய வழிதடங்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டு உள்ள மகா தீபத்தை, சூது கவ்வும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி சென்று தரிசனம் செய்து உள்ளார். அங்கு அவர் மகா தீபத்தை அருகில் நின்று தரிசிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர், திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே அதிசயம். மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது. ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் அவர் மகா தீபம் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி (கைடு) மூலமாக தான் அவர் மலைக்கு சென்று இருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thankful & grateful for God gurus for this blesses ????????????????????#arunachalam #prayingforall #sanchitashetty pic.twitter.com/hqmG9qvpJp
— Sanchita Shetty (@ISanchitaa) December 4, 2020

