கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த திலீப், வழக்கின் சாட்சியங்களை கலைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் நடிகர் திலீப் பயன்படுத்தி வந்த அனைத்து செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் திலீப், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாதிரியார் விக்டர் எவரெஸ்டியஸ் என்பவருடன் அடிக்கடி பேசியதும், வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் திலீப், கைது ஆவதற்கு முன்பும், அவர் ஜாமீனில் விடுதலை ஆனபிறகும், பாதிரியார் அவருடன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.
இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் பாதிரியார் விக்டர் எவரெஸ்டியசை விசாரிக்க முடிவு செய்தனர். எனவே அவருக்கு சம்மன் அனுப்பபட்டது.
போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பாதிரியார் விக்டர் எவரெஸ்டியஸ் போலீசார் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதில் நடிகர் திலீப்புடன் நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்ததாக அவர் கூறியுள்ளார். வழக்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், திலீப் ஜாமீனில் வந்த பிறகு நண்பர் என்ற முறையில் அவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறியுள்ளார். நடிகை பலாத்கார வழக்கு தொடர்பாக பாதிரியார் விக்டர் எவரெஸ்டியசிடம் போலீசார் விசாரணை நடத்தி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

