பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச படங்களை வெளியிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்த ராஜ் குந்த்ரா, வியான் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில் அவர் ஏராளமான அன்னிய செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பங்குச் சந்தையில் பெரிய மோசடியாக கருதப்படும் உள் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான ‘செபி’ 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான நோட்டீசு கிடைத்த 45 நாட்களுக்குள் அபராதம் செலுத்த வேண்டும் என அவர்களுக்கு ‘செபி’ உத்தரவிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ள ஒருவரின் துணை கொண்டு அதன் நிதி மற்றும் நிர்வாகத் தகவல்கள், ரகசியங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது ’உள் வர்த்தகம்’ எனப்படுகிறது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் இது மோசடிச் செயலாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

