விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய நடன நிகழ்ச்சிதான் ‘ஜோடி ஆர் யூ ரெடி’. கடந்த 2024ஆம் ஆண்டு முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது சீசன் தொடங்கியது. இந்த சீசனில் அபினவ் மற்றும் ராணி குமாரி ஜோடி வெற்றி வாகை சூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஜோடி ஆர் யூ ரெடி’ சீசன் 2வின் இறுதிப் போட்டிக்கான விளம்பரக் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. அந்த ப்ரோமோக்கள் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நடன நிகழ்ச்சியில் ஒரு கையால் நடனமாடி அனைவரையும் வியக்க வைத்த போட்டியாளர் ஆதிரா. அவரது தன்னம்பிக்கை பலருக்கும் ஆதரவு அளிக்கும் விதமாக இருந்தது.
ஆதிராவின் இந்த உறுதியைப் பார்த்த நடிகை ரம்பாவின் கணவரும், தொழிலதிபருமான இந்திரன், அவருக்கு செயற்கை கை பொருத்துவதற்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஒரு கை இல்லாத நிலையிலும் தனது திறமையால் அனைவரையும் அசர வைத்த ஆதிராவின் கனவை நனவாக்க இந்திரன் முன்வந்தது பலரையும் மனம் நெகிழ்ந்துள்ளனர்.
இந்திரனின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரது பெருந்தன்மையை வியந்து புகழ்ந்து வருகின்றனர். ‘ஜோடி ஆர் யூ ரெடி’ மேடையை தனது நடனத்தால் மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையாலும் நிரப்பிய ஆதிராவுக்கு இந்த உதவி ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இறுதிப் போட்டியில் ஆதிராவின் சிறப்பான நடனத்தையும், இந்திரனின் கருணை உள்ளத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.