Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ரீ திரை விமர்சனம்

Ree Movie Review

ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் மனோதத்துவ மருத்துவர் முகில். அவரது மனைவி ரீனா. இளம் தம்பதிகளான இருவரும் புதிதாக ஒரு வீடு வாங்கி, குடியேறுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஏதோ பெண்ணின் அலறல் ஒலி கேட்பதாக மருத்துவ கணவரிடம் தினமும் புகார் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் ரீனா. அது ஒரு மாயையாக இருக்கலாம் வீண் கற்பனையே தவிர நிஜமல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் மருத்துவர். மனைவியோ அதை உண்மை என்று நம்பிக் கொண்டு கணவர் நம்பாதவராக இருக்கிறார்.

இருவரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருக்க, ஒரு கட்டத்தில் மனைவி முறையீட்டுக்குச் செவி கொடுக்கிற மருத்துவர் முகில், அதன்பின்னர் களத்தில் இறங்கி ஆய்வு செய்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் பிரச்சினை இருப்பது தெரிகிறது. அங்கு குடியிருக்கும் இன்னொரு மருத்துவர் சாகுல் வீட்டில் இருந்துதான் அலறல் ஒலி கேட்கிறது என்று புரிகிறது. மெல்ல அந்த வீட்டிற்குள் நுழைந்து விசாரிக்கிக் முயற்சிக்கிறார் முகில். அங்கே மருத்துவர் சாகுல் பெரும் மனகுழப்பத்திற்கு ஆளாகியிருப்பது தெரிகிறது. அவரிடம் நெருங்க நெருங்க அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. தான் செய்த அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்த தன் மகளை வீட்டுக்குள் பிணமாகப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த மருத்துவர் முகிலுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. குற்ற உணர்ச்சிக்கு ஆளான மனசு, ஜான்சன் என்கிற இன்னொரு பாத்திரமாக உருவெடுத்து அவரை கொடுமைப்படுத்துவதாகக் கண்டுபிடிக்கிறார்.

அவருக்குள் மறைந்திருந்த அந்தப் பழிவாங்கும் பாத்திரத்தை, சிகிச்சை மூலம் வெளிக்கொண்டு வந்து சாகுலை எப்படி அதிலிருந்து முகில் மீட்கிறார்? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படத்தில் மனோதத்துவ நிபுணராக வரும் பிரசாந்த் சீனிவாசன், பெரும்பாலான காட்சிகளில் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அவரது மனைவியாக வரும் காயத்ரி ரமா, பயந்து அலறும் முக பாவனைகளை வெளிப்படுத்தி பயமுறுத்துகிறார். மருத்துவர் சாகுலாக வரும் பிரசாத், பார்க்க சாதுவாக இருப்பதும் இறந்து போன தன் மகளின் நினைவு வந்ததும் மனப்பிறழ்வு காட்டும் மனநோயாளியாக மாறுவதும் நடிப்புக்கு நல்ல வாய்ப்பு. மருத்துவர் சாகுலிடம் இருந்து குற்ற உணர்ச்சியாக வெளிப்படும் ஜான்சன் பாத்திரத்தில் இயக்குனர் சுந்தரவடிவேல் நடித்துள்ளார். தண்டனை… தண்டனை… என்று வீராவேசத்துடன் கூறிக்கொண்டு பழிவாங்கத் துடிக்கிற அந்த பாத்திரத்தில் அசல் மனநோயாளியாகவே தெரிகிறார்.

படத்தின் முதல் பாதி வழக்கம் போல காதல், பாடல்கள் என்று நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சுந்தரவடிவேல். இரண்டாம் பாதி அழுத்தமான காட்சிகள் இல்லாமல், அலுப்பூட்டுகிறது. திரைக்கதை சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படுத்தி சுவாரசியம் கூட்டுகிறது. யாருக்கு என்ன பிரச்சினை என்று யூகிக்க முடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் படத்தை காப்பாற்றப்படுகிறது. இசையமைப்பாளர் ஹரிஜி பாடல்களில் பழைய நெடி தெரிகிறது. இருந்தும் பின்னணி இசை பெரிய பலமாகப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. தினேஷ் ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று கூடுதல் பலம் இருந்தும் இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் ரீ சுவாரசியம் இல்லை..

Ree Movie Review
Ree Movie Review