இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குநரான மணிரத்னத்திடம் ஒரு வாய்ப்புக்காக பலரும் காத்திருக்கும் நிலையில், அவரது வெற்றிப் படம் ஒன்றை மீண்டும் வெளியிட்டால் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெளிப்படையாக பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ திரைப்படம் மும்பை கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நிலவிய பதற்றமான சூழலில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. ‘உயிரே உயிரே’, ‘கண்ணாளனே’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நடிகர் ராஜீவ் மேனன்.
சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் பேசிய ராஜீவ் மேனன், “பம்பாய் போன்ற ஒரு படம் இப்போது வெளியாகியிருந்தால் திரையரங்குகள் எரிந்திருக்கும். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. முன்பு இருந்த சாதாரண நிலை இப்போது இல்லை. மதம் ஒரு பெரிய சக்தியாகவும், பிரச்சினைகள் நிறைந்ததாகவும் மாறிவிட்டது” என்று கவலை தெரிவித்துள்ளார். இந்து இளைஞனும் முஸ்லிம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருந்ததே அப்போதைய சர்ச்சைகளுக்கு காரணம். தற்போதுள்ள சூழலில் இது மேலும் தீவிரமான எதிர்வினைகளை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜீவ் மேனனின் இந்த கருத்து, நாட்டில் நிலவும் மதரீதியான பதற்றத்தையும், கருத்து சுதந்திரத்தின் மீதான அழுத்தத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு படைப்பு, காலமாற்றத்தால் சர்ச்சைக்குரியதாக மாறுவது வருத்தமளிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னத்தின் ‘பம்பாய்’ திரைப்படம் ஒரு கலைப் படைப்பாக மட்டுமல்லாமல், அன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.