தமிழ் சின்னத்திரையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் ரோபோ ஷங்கர். தொலைக்காட்சியில் நீண்ட கால பயணத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகராகவும் கலக்கி வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் திரையில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள அவருக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ‘பிகில்’, ‘விருமன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். தற்போது திருமண வாழ்க்கையிலும், குழந்தை வளர்ப்பிலும் பிஸியாக இருக்கும் நிலையில், ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், பிரியங்கா ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘தனம்’ என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த நிலையில், தற்போது அவரது மனைவியும் அதே தொலைக்காட்சியில் சீரியலில் களமிறங்குவது ரசிகர்களுக்கு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘தனம்’ சீரியலில் பிரியங்காவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும், அவர் என்ன மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரோபோ ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சின்னத்திரையிலும் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ ‘தனம்’ சீரியலில் பிரியங்காவின் தோற்றம்:


