கோயம்பதூரில் வசித்து வரும் அருண் விஜய் தன் மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்ல நினைக்கிறார். இதனால் தன்னிடம் இருக்கும் நிலங்களை எல்லாம் விற்று பயணத்தை ரெடி செய்கிறார். இன்னொருபுறம் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை அழிக்க தீவிரவாதி கும்பல் திட்டம் தீட்டுகிறது.
அருண் விஜய் தன் மகள் மருத்துவ செலவிற்கான மொத்த பணத்தையும் லண்டனிற்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாது என்பதால் ஒருவரிடம் கொடுத்து லண்டனில் தான் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அந்த நபர் அருண் விஜய்யிடம் ரூபாய் நோட்டு ஒன்று கொடுக்கிறார். இதன் மூலம்தான் லண்டனில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இதையடுத்து லண்டனுக்கு செல்லும் அருண் விஜய்க்கு நர்சாக பணிபுரியும் நிமிஷா சஜயன் உதவி செய்கிறார். இந்த நேரத்தில் ரூபாய் நோட்டு இருக்கும் பர்ஸை ஒருவன் திருடிவிடுகிறான். இதை மீட்கும் முயற்சியில் இருக்கும் அருண் விஜய்யை போலீசார் பிடிக்கின்றனர்.
மற்றொருபுறம் தீவிரவாதி கும்பலில் ஒருவன் அருண் விஜய்யை பார்த்துவிட்டு பதறி போய் தன் தலைவனுக்கு போன் செய்யும் நேரம் அவன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றான்.
இறுதியில் அருண் விஜய் போலீஸில் இருந்து விடுவிக்கப்பட்டாரா? அருண் விஜய்யை பார்த்ததும் அந்த நபர் பயப்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆக்ஷன் காட்சிகள் என்றாலே தெறிக்கவிடும் அருண் விஜய் இந்த படத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். ஆனால் அது ஒரு சில காட்சிகளுக்கு எடுபடவில்லை. எமி ஜாக்சன் படம் முழுக்க வசனங்களை மட்டும் ஒப்பித்துள்ளார். ஒரு சில இடங்களில் மட்டும் கைத்தட்டலை பெறுகிறார்.
நிமிஷா சஜயன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். அருண் விஜய்யின் குழந்தை பேசும் எமோஷனல் வசனங்கள் உருக வைக்கிறது.
படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளால் நிரப்பியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். படத்தின் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.படத்தில் இடம்பெற்றுள்ள மிளகாய் பொடி காட்சி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்
சந்தீப் கே விஜய் அதிரடி காட்சிகளை தன் ஒளிப்பதிவின் மூலம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
ஆண்டனி படத்தொகுப்பு ஓகே.
மொடப்பள்ளி ரமணா கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.
லைகா நிறுவனம் ‘மிஷன் சாப்டர் -1 அச்சம் என்பது இல்லையே’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
