Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

மிடில் கிளாஸ் திரை விமர்சனம்..!

middle-class movie review

சென்னையில் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் முனிஷ்காந்த். மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களுக்கு வெவ்வேறு கனவுகளும் இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முனிஷ்காந்த் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால், முனிஷ்காந்திற்கு சொந்த ஊரில் நிலம் வாங்கி செட்டிலாக வேண்டும் என்பது கனவு. ஆனால், விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்தமாக வீடு வாங்கி இங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு. இதற்கிடையே, ஊரில் பெரிய ஆளாக இருந்த முனிஷ்காந்தின் தந்தையின் சொத்து மூலம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை கிடைக்கிறது. அதற்குள், நமக்கு வரப்போகிறது என்று இருவரும் தாம் தூம் என்று கடன் வாங்கி செலவு செய்கிறார்கள். இந்தநிலையில், காசோலை தொலைந்துவிடுகிறது. இறுதியில் காசோலை கிடைத்ததா? தங்களது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற கனவில் மிதந்த இவர்களின் மிடில் கிளாஸ் வாழ்க்கை மாறியதா என்பது படத்தின் மீதிக்கதை…

மிடில் கிளாஸ் நாயகனாக வரும் முனிஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு குடும்பத் தலைவனாக, மிடில் கிளாஸ் அப்பாவாக தனது நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்ப தலைவி கதாப்பாத்திரத்தில் விஜயலட்சுமி அசத்தி இருக்கிறார். இவர்களை தாண்டி கோடாங்கி வடிவேல், குரேஷி, காளி வெங்கட், ராதா ரவி, வேல ராமமூர்த்தி ஆகியோரும் கதாப்பாத்திற்கு ஏற்ப சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக எடுத்துள்ளார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து, மாத சம்பளத்தை மட்டுமே வைத்து ஒரு குடும்பத்தை நடத்தும் ஒரு சராசரி தம்பதி படும்பாடை அழகான காட்சிகள் மூலம் எடுத்துரைத்துள்ளார். படத்தில் சில ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படம் நகர்கிறது.

பிரணவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

middle-class movie review

middle-class movie review