32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’
மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள விஷயம் பார்ப்போம்..
மெகா ஸ்டார் மம்முட்டி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.
முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் பூஜையில் மம்முட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தில் மம்மூட்டியுடன் இந்த்ரன்ஸ், கிரேஸ் ஆண்டனி, ஸ்ரீஷ்மா சந்திரன் மற்றும் சீனத் ஏபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 8-வது படைப்பாக அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘பாதயாத்ரா’ திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்’ என மம்முட்டி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தின் கதைக்களம் குறித்து எதையும் படக்குழு வெளியே விடவில்லை என்றாலும், அடூர் கோபாலகிருஷ்ணனின் முந்தைய படங்களைப் போலவே இதுவும் ஒரு யதார்த்தமான, கலை நயம் மிக்க படைப்பாக இருக்கும் என ரசிகர்கள் கணிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


