’1983’ மற்றும் ’ஆக்ஷன் ஹீரோ பைஜூ’ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அப்ரின் ஷைன் – நிவின் பாலி கூட்டணியின் மூன்றாவது படம் தான் ‘மஹாவீர்யர்’. மலையாள திரைப்படமான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிறுக்கிறது.
மன்னர் ஆட்சி காலத்தையும், தற்போதைய காலக்கட்டத்தையும் இணைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமான சினிமாவாக இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான சிந்தனையோடு உருவாகியிருக்கும் இப்படம் நாட்டில் நடக்கும் பல அவலங்களை தேலூரித்திருக்கிறது.
மன்னராட்சிக் காலத்தை சேர்ந்த மன்னர் மற்றும் அவரது அமைச்சர் ஆகியோர் செய்த தவறுக்காக இக்காலத்து நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்கிறார்கள். இந்த விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது சாமியாரான நிவின் பாலி மீது ஒரு வழக்கு, அவரையும் இதே நீதிமன்றம் விசாரிக்க, ஒரு கட்டத்தில் மன்னர் மற்றும் அமைச்சர் பிரச்சனையை தீர்த்து வைக்க சாமியாரான நிவின் பாலி ஒரு தீர்வு சொல்வதாக கூறுகிறார். அது என்ன தீர்வு? அதன் மூலம் இவர்களுடைய பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதை நாம் சிரிப்பதோடு, சிந்திக்கும்படியும் சொல்வது தான் ‘மஹாவீர்யர்’ படத்தின் கதை.
சாமியார் வேடத்தில் நடித்திருக்கும் நிவின் பாலி, நீதிமன்ற காட்சிகளில் பேசும் வசனங்கள் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. முதல் பாதியில் நம் கனவத்தை ஈர்க்கும் நிவின் பாலி இரண்டாம் பாதி படத்தில் ஒரு பார்வையாளராக அமர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இருந்தாலும் கதையின் முக்கிய திருப்புமுனையாக அவருடைய வேடம் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.மன்னராக நடித்திருக்கும் லால், அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் ஆகியோர் நடிப்பு நேர்த்தி.
நாயகியாக நடித்திருக்கும் ஷான்வி ஸ்ரீவத்சவா, அனைவரையும் கவரும் அழகியாக இருக்கிறார். நீதிமன்றத்தில் அரைநிர்வாணத்தில் அவர் நிற்கும் போது அவர் மீது அனுதாபம் ஏற்படுகிறது. படம் முழுவதும் நீதிமன்றத்திற்குள் நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. படம் நம்மை சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் சமூகத்தின் அவலங்களை அலசியிருப்பது சிந்திக்க வைக்கிறது.
மொத்தத்தில், அரைத்த மாவையே அரைக்காமல் முழுக்க முழுக்க வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருக்கும் ‘மஹாவீர்யர்’ சிரிக்க வைக்கும் சினிமாவாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும் சமூக படமாகவும் இருக்கிறது.
