சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து காப்பாற்றி வருகிறார். இவரது குணத்தை அறிந்த நாயகி ருக்மணி வசந்த், சிவகார்த்திகேயனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகி விடுகிறது. ஆபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றாமல் விட்டுவிடுகிறார்.சிவகார்த்திகேயன் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து ருக்மிணி வசந்த் அவரை விட்டு பிரிகிறார். இதனால் வாழ்க்கையை வெறுக்கும் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். இதே சமயம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வித்யூத் ஜமால், சபீர் கும்பல் கடத்தி வந்து, ஒரு பெரிய தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைக்கிறார்கள்.தற்கொலை செய்ய நினைக்கும் சிவகார்த்திகேயனை, அந்த தொழிற்சாலை மற்றும் துப்பாக்கிகளை அழிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் பணயம் வைக்கிறார்கள். இறுதியில் சிவகார்த்திகேயன், தொழிற்சாலையை அழித்தாரா? காதலி ருக்மிணி வசந்த்துடன் இணைந்தாரா? வித்யூத் ஜமால், சபீர் இருவரும் சிவகார்த்திகேயனை என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன், துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார். நாயகியுடன் காதல், எதிரிகளுடன் சண்டை, டைமிங் காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக மருத்துவமனையில் நோயாளிகளை காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனை அடிப்பது, கண்டிப்பது, அரவணைப்பது, சிவாவை நினைத்து வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். வில்லத்தனத்தில் வித்யூத் ஜமால், சபீர் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். என்.ஐ.ஏ அதிகாரியாக வரும் பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
துப்பாக்கி கலாச்சாரம் தமிழ்நாட்டில் வர வேண்டும் என்று நினைக்கும் தீவிரவாதத்திற்கும், அதை தடுக்க நினைக்கும் என்.ஐ.ஏ க்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த போராட்டத்திற்கு இடையே காதல், காமெடி, சென்டிமென்ட் என ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படத்தை கொடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
சுதீப் எலமான் ஒளிப்பதிவு சிறப்பு.
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
