காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது தந்தை ஒரே இடத்திலேயே ஏன் மறைந்து போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பாங்ரா என்ற நாட்டை ஒரு ராஜா ஆட்சி செய்து வருகிறார். காந்தாரா மலைப்பகுதிகளில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்ற நினைக்கும் மன்னன் படையுடன் சென்று காந்தார மக்களை அழிக்க பார்க்கிறார். ஆனால் தெய்வத்தின் உதவியுடன் மக்கள் மன்னரின் படைகளை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெறுகிறார்கள். இந்த போரில் உயிர்பிழைத்த ராஜாவின் வாரிசுகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் காந்தராவை கைப்பற்ற நினைக்கிறார்கள். ராஜா வாரிசுகளின் ஆசை நிறைவேறியதா? இல்லை அதை கதாநாயகன் ரிஷப் செட்டி தடுத்து நிறுத்தினாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் இப்படத்தில் அவர் மிளிர்கிறார். தெய்வ சக்தி வந்தவுடன் ரிஷப் ஷெட்டி ஆடும் ஆட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். வழக்கமான ‘கதாநாயகி’ பாத்திரம் போல் அல்லாமல் அழுத்தமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மன்னரின் அப்பாவாக வரும் ஜெயராம் உட்பட படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இயக்கம்: காந்தாரா படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த ரிஷப் ஷெட்டி, வரலாற்று கதை அம்சம் கொண்ட காந்தாரா சாப்டர் 1 படத்தில் மேலும் மெனெக்கெட்டு உழைத்துள்ளது திரையில் தெரிகிறது. குறிப்பாக அருமையான VFX காட்சிகள், சிறப்பான மேக்கிங் படத்திற்கு வலுசேர்க்கின்றன. அதே சமயம் காந்தாரா படத்தில் இருந்த சுவாரசியம் காந்தாரா சாப்டர் 1 படத்தில் இல்லை. கதை மிகவும் மெதுவாக நகர்வது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. மேக்கிங்கில் கவன செலுத்திய ரிஷப் ஷெட்டி திரைக்கதையில் சற்று சறுக்கி விட்டார்.
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அதைவிட அவரின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
அரவிந்த் கஷ்யப்பின் ஒளிப்பதிவு நம்மை படத்தின் வரலாற்று காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது.
ஹோம்பாலே பிலிம்ஸ்
