Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜன.9 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் இல்லை சென்சார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Janyayan will not be released on January 9th, verdict in censor case postponed

ஜன.9 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் இல்லை சென்சார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ‘பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ‘பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்’ என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை 9-தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ஜனநாயகன் படம்நாளை 9-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.

Janyayan will not be released on January 9th, verdict in censor case postponed
Janyayan will not be released on January 9th, verdict in censor case postponed