‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவர் உத்தரவை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. அத்துடன், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் இ.சி.அகர்வாலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜனவரி.15-ந்தேதி விசாரித்தது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, தணிக்கை வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு முன்பே படம் வெளியாகும் தேதியை அறிவிப்பது திரைப்படத் துறையில் வழக்கம் என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தாக்கல் செய்த மனுவை ஒரே நாளில் விசாரித்து உத்தரவிட்டதை போல, அனைத்து நீதிபதிகளும் அனைத்து வழக்குகளையும் ஓரிரு நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு கூறினால் வரவேற்போம். இந்த விவகாரத்தில் 6-ந்தேதி தாக்கல் செய்த மனுவை மிக விரைந்து 7-ந்தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தணிக்கை வாரியத் தலைவர் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்த 6-ம் தேதியிட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவில்லை’ என்றனர்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘மறு ஆய்வு குழு பரிசீலனைக்கு திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை வாரியத்திடம் இருந்து ஜனவரி 5-ந்தேதி கிடைத்த கடிதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதே தகவலை மத்திய தணிக்கை வாரியத் தலைவர் ஜனவரி 6-ந்தேதி தெரிவித்தார். ஜனவரி 5-ந்தேதியிட்ட உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவு இந்த விவகாரத்தில் கெட்ட நோக்கத்துடன் உள்ளது. திரைப்படம் உரிய நேரத்தில் திரையிடப்படாவிட்டால் அழுகிப் போன பொருளை போன்று நஷ்டம் ஏற்பட்டு விடும்’ என வாதிட்டார்.


