நடிகர் விஜய், இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் திரையுலக பயணத்தின் இறுதி அத்தியாயமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அரசியலில் முழு கவனம் செலுத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதால், இந்த படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை விமான நிலையம் வந்த விஜய்க்கு அவரது ரசிகர்களும், அரசியல் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சிலர் விஜய்யை பின்தொடர்ந்து கொடைக்கானல் வரை சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ரசிகர்களை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்று விஜய் வேண்டுகோள் விடுத்தும் சிலர் அவ்வாறு நடந்து கொண்டனர்.
இதனிடையே, கொடைக்கானலில் நடைபெற்று வந்த ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்புக்கு திடீரென தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்தவுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டபடி, நடிகர் விஜய் தனது காட்சிகளை மே 5ஆம் தேதிக்குள் முடித்துவிட்டு சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு மழையால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து படம் திரைக்கு வரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.