Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொய் சொன்னால் விளைவுகளை சந்திக்க நேரிடும்- இளவரசை எச்சரித்த நீதிபதி

If you tell a lie, you will face consequences - the judge warned the ilavarasu

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மொபைல் அழைப்புகளையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மொபைல் லோகேஷன் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இளவரசு 12-ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான ஆவணங்கள் இருக்கிறது நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி இளவரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.