கமல்ஹாசனிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‘திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி’ என விஜய் கூறி வருகிறார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு கமல்ஹாசன் கூறியதாவது,
‘என் எதிரி, நேரடி எதிரி என்றால் அது சாதிவெறி தான். சாதிவெறி என்பது ரொம்ப ரொம்ப வன்முறை நிறைந்தது. அதை விரைவில் சரியான முறையில் கையாள வேண்டும். அதுதான் என் எதிரி. என் எதிரியை நான் தேர்வு செய்துவிட்டேன். அது பெரிய எதிரி’ என்றார்.
சினிமாவில் மட்டும் அல்ல அரசியலிலும் சீனியர் என்கிற முறையில் விஜய்க்கு ஏதாவது அறிவுரை வழங்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு கமல் ‘அறிவுரை வழங்கும் இடத்தில் நான் இல்லை. நான் அறிவுரை கேட்டது இல்லை. ஏனென்றால், அது எனக்கு சரியான நேரத்தில் கிடைத்ததே இல்லை. அதனால் என் தம்பிக்கு அறிவுரை வழங்க இது சரியான நேரம் இல்லை. நம்மை விட அனுபவம் தான் சிறந்த ஆசான்.
நான் ஒரு சார்பாக இருக்கலாம் ஆனால் அனுபவம் அப்படி இல்லை. நீங்கள் எதை கற்க வேண்டுமோ அதை சரியாக கற்றுக் கொடுப்பது அனுபவம் தான்’ என்றார்.
கமல் சொன்னதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது, ‘ஆண்டவர் ரொம்ப தன்மையாக பேசியிருக்கிறார். விஜய் தன் எதிரி இல்லை. மேலும், அந்த தம்பிக்கு அறிவுரை வழங்க நான் இல்லை. அனுபவம் தான் சிறந்த ஆள்’ என கமல் சொல்லியிருப்பது மிகவும் சரி. முதலில் அனுபவத்தை பெற்ற பிறகே அரசியல் பற்றி புரிய வரும். சினிமாவுக்கு வந்த உடனே யாரும் உச்ச நட்சத்திரமாகிவிட முடியாது. அனுபவம் தேவை. அதே மாதிரி அரசியலில் விஜய்க்கு அனுபவமே இல்லை. நிறைய கற்க வேண்டியிருக்கிறது. அவரின் அரசியல் பயணம் நல்லபடியாக அமையட்டும்’ என்கிறார்கள்.
கமல் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, ‘விஜய் ரசிகர்கள் என்ன தான் கமலை தரக்குறைவாக பேசினாலும், அவர் தவெக தலைவரை தம்பி என பாசமாக அழைக்கிறார். இது தான் அவரின் நல்ல மனசு’ என தெரிவித்துள்ளனர். தற்போது இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி தெறிக்கிறது.

