தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அர்ச்சனாவுக்கு 60- வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக பாலாஜி சக்திவேல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாலாவை அணுகுகிறார்.பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பாலா, பாலாஜி சக்திவேல் ஊரில் ஜமீந்தாராக இருந்தவர் என்பதை தெரிந்துக் கொண்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். ஊரில் இருக்கும் நிலத்தை விற்று ரூபாய் 90 லட்சம் பணத்தை வைத்து 60 வது திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வர, பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் பணம் அனைத்து பணமும் செல்லாமல் போய்விடுகிறது.இறுதியில் மனைவியின் ஆசையை பாலாஜி சக்திவேல் நிறைவேற்றினாரா? பாலாவின் பணம் ஆசை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
முழு படத்தையும் தன் தோளில் தாங்கி பிடித்து இருக்கிறார் பாலாஜி சக்திவேல். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற துடிக்கும் பாசமான கணவனாக மனதில் நிற்கிறார். மனைவியை பார்த்து அடிக்கடி அதான் நீ இருக்கல… என்று சொல்லும் போது நெகிழ வைத்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் அர்ச்சனா போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக வரும் பாலா, படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் நடித்து இருக்கிறார். பணம் மட்டுமே குறிக்கோள் என்பதற்கு காரணம் சொல்லும் போது கவனிக்க வைத்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவருக்கு ஜோடியாக நடித்து இருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பாலாவை திட்டும்போதும், அவரது பாசத்துக்கு ஏங்கும் போதும் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
மனைவியின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் கணவனின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷெரீப். ஒரு அழகான காதல் கதையை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். லாஜிக் மீறல்கள், சுவாரசியம் இல்லாத ஒரு சில காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை காட்சிகளுக்கு ஏற்ப கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.
Adhimulam கிரேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.


