நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மாமன்’. ‘விலங்கு’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் மே மாதம் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘மாமன்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், பழம்பெரும் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்வாஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் படம் குறித்து பேசுகையில், ‘விலங்கு’ தொடரின் திகில் மற்றும் வன்முறை பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை சொல்ல விரும்பியதாக கூறினார். நாம் ஒருவரையொருவர் சார்ந்து, உதவி செய்து வாழ்ந்து வருகிறோம். அந்த உறவுகளின் முக்கியத்துவத்தை சினிமாவிலும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ‘மாமன்’ திரைப்படம் ஐந்து வயது சிறுவனை மையமாக வைத்து, உறவுகளின் நெருக்கத்தையும் அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் கதை.
மேலும், இது சூரிக்கு தான் சொன்ன ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும், இதில் யாரும் வில்லன்கள் இல்லை என்றும், ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உறவுகள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் நம் கண்ணுக்கு பெரிதாக தெரிவதில்லை. பல பிரச்சினைகள் நாம் சரியாக புரிந்து கொள்ளாததாலேயே ஏற்படுகின்றன. தவறு செய்யாத மனிதன் யாருமில்லை. ஆகவே, கிராமத்து மண்ணையும், அங்குள்ள மக்களின் மனதையும் மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க முயற்சி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘மாமன்’ படத்தில் சூரி, தன் அக்கா மகன் மீதுள்ள பாசத்தையும், தனக்குப் பழகிய பெண்ணின் மீதுள்ள காதலையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தோன்றும் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்தில் உள்ளன. ‘மாமன்’ திரைப்படத்தைப் பார்க்கும்போது நம்முடைய உறவுகள் அனைவரின் நினைவும் வரும் என்று இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
