Dhanush Stresses the Importance of Tamil
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. எல்.கே.ஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை தான் கல்வி கற்ற பள்ளிக்காக, தனது சொந்த செலவில் புதிய கட்டிடத்தை அமைத்துக் கொடுத்த நடிகர் தனுஷ், ‘தனுஷ் பிளாக்’ என்ற பெயரில் அமைந்த அந்தக் aகட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் தனது பழைய ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற தனுஷ், ஆசிரியர்கள், முன்னாள் வகுப்புத் தோழர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
அப்போது அவர், “நாங்கள் படித்த காலத்தில் ஆங்கிலம் சரளமாக பேச முடியாது. தவறுகளுடன் பேசினாலும், தமிழை நன்றாகப் படிக்கவும் எழுதவும் தெரியும். ஆனால் இன்று நான் சந்திக்கும் 10 பேரில் 8 பேருக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியவில்லை. ஆங்கிலத்தில் மட்டும் திறமையாக இருப்பது வருத்தமளிக்கிறது” என்றார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்தார். “எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். அதற்குக் காரணம் கேட்டபோது, ‘தாய்மொழி தெரிந்திருப்பதுதான் முதன்மை; ஆங்கிலம் என்பது கூடுதல் திறன் மட்டுமே’ என்று கூறினர். அந்த சம்பவம் மொழி குறித்த எனது பார்வையை மாற்றியது” என்று நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து, “தாய்ப்பாலைப் போலவே தாய்மொழியும் மிகவும் முக்கியமானது. அதை விடுத்து வேறு மொழிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது சரியல்ல. தமிழ் தெரியாது என்று சொல்வது பெருமையல்ல; அது அவமானம். ஒவ்வொரு மாணவரும் முதலில் தாய்மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளரும், தனுஷின் பள்ளித் தோழருமான ஏ. குமரன், பள்ளியின் உள்கட்டமைப்பு தேவையை அறிந்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் தனுஷ் நிதியுதவி வழங்கியதாக தெரிவித்தார். மேலும், பழமையான பள்ளிக் கட்டிடங்களையும் சீரமைத்து, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து செய்து தருவதாக தனுஷ் உறுதியளித்திருப்பதாகவும் கூறினார்.
இறுதியாக, தாங்கள் கல்வி கற்ற பள்ளிகளை மறக்காமல், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்களால் முடிந்த அளவில் பங்களிக்க வேண்டும் என்றும் தனுஷ் கேட்டுக்கொண்டார்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…