பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலன்’ படத்தை உலகம் முழுவதும் உள்ள சில திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் யோசனையில் உள்ளதால் அதன் வெளியீட்டு தேதி ஜனவரி 26-இல் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே ‘தங்கலான்’ திரையரங்குகளில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண். தற்போது தனது ஐந்தாவது படமான ‘சியான் 62’ படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.
