கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும் என்று அப்பா பசுபதி மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் அக்கா ரெஜிசா விஜயன், துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதனால் பெரிய கபடி வீரனாக ஆக வேண்டும் என்று துருவ் விக்ரம் ஆசைப்பட்டு வருகிறார். அதே ஊரில் வசிக்கும் அமீரும், லால்-லும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து கொண்டு அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். இந்த சண்டை துருவ் விக்ரம் கபடி விளையாட்டிற்கு முட்டுக் கட்டியாக இருக்கிறது. இறுதியில் தடைகளை கடந்து துருவ் விக்ரம் கபடி விளையாட்டில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துருவ் விக்ரம், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். விளையாட்டு வீரருக்கான உடல் அமைப்பு, உடல் மொழி என கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாதிக்க முடியாத ஏக்கம், காதல், என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமை விடாமல் காதலிப்பது, காதலுக்காக வீட்டை எதிர்த்து சண்டை போடுவது என கவனிக்க வைத்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் பசுபதியின் நடிப்பு. மகனை நினைத்து வருந்துவது, அடிவாங்குவது, என கிடைக்கும் இடங்களில் எல்லாம் அசத்தி இருக்கிறார். பாசமான அக்காவாக மனதில் பதிந்து இருக்கிறார் ரெஜிசா விஜயன். ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன், எப்படி வாழ்க்கையில் முன்னேறி வருகிறான் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒரு பிளாஷ்பேக் சொல்லும் போது அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக் வருவதை தவிர்த்து இருக்கிறார். வழக்கமாக அவருக்கே உரிய குறிப்பிட்ட சமூகத்தை பற்றியே படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் நீளமும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவீனமாக அமைத்து இருக்கிறது.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
