இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இசைக்கென ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற “வீர ராஜ வீரா” பாடல் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
உஸ்தாத் ஃபையாஸ் வாஸிஃபுதீன் டாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மறைந்த உஸ்தாத் என். ஃபையாஸுத்தீன் டாகர் மற்றும் உஸ்தாத் ஜாஹிருத்தீன் டாகர் ஆகியோர் உருவாக்கிய புகழ்பெற்ற சிவா ஸ்துதி பாடலை “வீர ராஜ வீரா” பாடலில் அப்படியே பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஹ்மான் தரப்பில் இந்த பாடல் சிவா ஸ்துதியால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், டெல்லி நீதிமன்றம் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், “வீர ராஜ வீரா” பாடலில் சிவா ஸ்துதி பாடலின் வரிகள் மாற்றியமைக்கப்பட்டு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் தற்போது ஒளிபரப்பாகும் ஓடிடி தளங்களில், “மறைந்த உஸ்தாத் என். ஃபையாஸுத்தீன் டாகர் மற்றும் மறைந்த உஸ்தாத் ஜாஹிருத்தீன் டாகர் ஆகியோரின் சிவா ஸ்துதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இசை” என்ற வாசகத்துடன் ஒரு ஸ்லைடை இணைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் நீதிமன்றத்தில் 2 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், டாகர் குடும்பத்தினரின் வழக்குச் செலவுகளுக்காக கூடுதலாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டது திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், படைப்பாளிகள் மற்றவர்களின் கலைப்படைப்புகளைப் பயன்படுத்தும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.