Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

அநீதி திரை விமர்சனம்

aneethi movie review

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் தாஸ் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டு சென்னையில் தன் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அடிக்கடி கோபம் வரும் சுபாவம் கொண்ட இவர் அந்த கோபத்தை வெளிக்காட்டாமல் அந்த நபரைக் கொல்வது போன்றும் அடிப்பது போன்றும் தன்னுள்ளே நினைத்து அடக்கிக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் துஷாரா விஜயன் ஒரு வீட்டில் ஒரு பாட்டியை கவனித்து கொண்டு வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் அர்ஜுன் தாஸ் அந்த வீட்டிற்கு உணவு டெலிவரிக்காக போகும் போது துஷாரா விஜயனை பார்த்து காதல் வயப்படுகிறார். இதிலிருந்து அந்த வீட்டிற்கு யார் உணவு டெலிவரிக்காக சென்றாலும் அதை வாங்கி இவர் டெலிவரி செய்து தன் காதலை வளர்க்கிறார்.

இப்படி இவர் காதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் செல்கிறது. ஒரு கட்டத்தில் துஷாரா விஜயன் கவனித்து வரும் பாட்டி இறந்துவிடுகிறார். துஷாரா விஜயன் மட்டும்தான் அந்த வீட்டில் இருந்து அவரை கவனித்து வருவதால் எல்லோருக்கும் இவர் மீது சந்தேகம் திரும்புகிறது. இறுதியில் பாட்டியை கொன்றது யார்? துஷாரா விஜயனும், அர்ஜுன் தாஸும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. கதாநாயகனான அர்ஜுன் தாஸ் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அவரது குரலும், தோற்றமும் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளது. எமோஷன், கோபம் என அனைத்திலும் தேவையான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார்.

அப்பாவாக வரும் காளிவெங்கட் சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் மனதில் நிற்கும் அளவிற்கு நடித்துள்ளார். அவரின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொருவரின் அப்பாவையும் நியாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தன் தேர்ந்த நடிப்பால் பாராட்டை பெறுகிறார். கதாநாயகியான துஷாரா விஜயன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாட்டியின் மகளாக வரும் வனிதா விஜயகுமார் திமிரான நடிப்பால் அசத்தியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் மக்கள் அதிகம் சமாளிக்கும் மன அழுத்தத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.

திரைக்கதையின் முதல் பாதியில் தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பை கூட்டியுள்ளது. திரைக்கதையுடன் நம்மையும் ஒன்றிவிட வைக்கிறது. அடுத்து என்ன என்ற கேள்வி படம் முழுக்க நம்முடன் பயணித்து நமது ஆர்வத்திற்கு தீணிபோடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஏ.எம்.எட்வின் சாகே ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மொத்தத்தில் அநீதி – பிரகாசம்

aneethi movie review
aneethi movie review