நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துக்களை பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் போலீசாருக்கு சவால்விடும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று சென்னை அழைத்து வரப்பட்ட அவரை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்குள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
வேனில் இருந்து இறங்கியதும் நடிகை மீரா மிதுன் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து, போலீசார் அராஜகமாக நடந்து கொள்கிறார்கள். துன்புறுத்துகின்றனர். கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக சாப்பாடு வாங்கி கொடுக்கவில்லை என்று கூறியபடி சென்றார்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.